மீனாட்சி அம்மன் கோவில்
தமிழ்நாட்டின் சிறப்பு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலானது உலக அதிசயப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அற்புத ஆச்சரியங்கள் கொண்ட ஆன்மீக தலமாகும். இந்தியாவின், தமிழகத்தில், மதுரை நகரில் உள்ள ‘உலகப் பிரசித்திப் பெற்ற சிவாலயம்’ தான் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். இக்கோயில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாக திகழ்கின்றது கோவில்.
உருவான வரலாறு
17 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது. இக்கோவில் ஆதியில் இந்திரனால் கட்டப்பட்டது என்கின்றனர்.தனக்கு ஏற்பட்ட கொலைப் பாவமான ‘பிரம்மஹத்தி தோசம்’ நீங்க பல தலங்களுக்குச் சென்று வந்த இந்திரன் கடம்பவன காட்டுப்பகுதிக்கு வந்தபோது சுயம்புவாகத் தோன்றியிருந்த லிங்கத்தை வழிபட்டு, சிவபெருமானின் அருள் பெற்றதும். இங்கேயே சிறு கோயில் உருவாக்கியுள்ளார், என்பது திருவிளையாடல் புராணத்தால் தெரியவருகிறது.
மதுரை உருவான அதிசயம்
அடுத்து வெகு காலத்திற்குப் பிறகு வணிகர் தனஞ்ஜெயன், தனது சொந்த ஊரான மண ஊருக்கு திரும்பும்போது இரவு ஆனதால் கடம்ப காட்டின் நடுவே, பொய்கை கரையோரம் தங்கினார். அன்று இரவு, அங்குள்ள சுயம்பு லிங்கத்திற்கு விண்ணிலிருந்து வந்த தேவர்கள் பூஜை செய்து பூஜித்த அதிசயத்தை கண்ட வியந்தார். அதனை மறுநாள் குலசேகர பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார். அன்று இரவு மன்னனின் கனவிலும் சிவபெருமான் தோன்றி கடம்பவனத்தை திருத்தி நகராக மாற்று எனக் கட்டளையிட்டார். அப்படி உருவானதுதான் பேரழகு மதுரை நகரமும், பிரம்மாண்ட மீனாட்சி அம்மன் கோயிலும் ஆகும்.
கோயில் நகரம்: பாண்டிய இளவரசியாக அன்னை மீனாட்சி அவதரித்ததையும், பிறகு சுந்தரேஸ்வரர் ஆன சிவபெருமானை மணமுடித்ததையும் வரலாறு தெரிவிக்கிறது. மதுரை மன்னர் திருமலை உள்ளிட்ட பலராலும் இத்தலத்தின் முக்கிய பகுதிகள் அழகுற எழுப்பப்பட்டு, உயர சுற்றுச் சுவருடன் விண்ணை முட்டும் நான்கு கோபுர வாயில்களும், அதனுள்ளே எட்டு சிறிய கோபுரங்களும் அமைந்து இத்தலம்
” கோயில் மாநகரம்” என்று அழைக்கப்படுகிறது.
கோயிலின் சிறப்பு
சுந்தரேஸ்வரருக்கு மேலே உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரனுக்கு நேர்ந்த கொலை பாவத்தை நீக்கும் பொருட்டு பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய கடம்ப வனமான மதுரையில் சுயம்புலிங்கமாக இருப்பதை தரிசித்த இந்திரன் பாவ விமோசனம் பெற்றார். இதனால் இந்திரன் இங்கு விமானத்துடன் கூடிய பெரும் கோயில் எழுப்பினார். இதனால் தற்போது இந்திரன் விமானம் என அழைக்கப்படுகிறது. இந்திரன் கண்ட சுயம்பு சிவலிங்கத்திற்கு 8 யானை சிற்பங்கள் தாங்கும் தோரணையுடன் முதல் விமானம் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு திசைக்கும் இரண்டாக நான்கு பக்கங்களிலும் இந்த கல்யானைகளை இன்றும் காணலாம்.
மரகத மீனாட்சி
இங்கு மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது. மதுரைக்கு வந்த மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலத்தினை பூலோக கைலாசம் என்றும் அழைக்கின்றனர். இதனால் இந்த தளத்திற்கு சென்று நம் பெயரை படித்தாலே முக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
கால் மாறி ஆடிய நடராஜர்
சுவாமி சன்னதிக்குள் நுழையும் பொழுது வலதுபுறத்தில் நடராஜர் சிலை இருக்கும். மற்ற கோயில்களில் இருப்பது போல் இல்லாமல் இடது காலுக்கு பதில்,வலது கால் தூக்கி நடனம் ஆடுவது போல் சிலை உள்ளது. மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் நடனம் கற்று வந்தார். அவர் சுவாமியை தரிசித்த போது அவரிடம் “இறைவா நான் நடனம் கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். அதனால் காலம் காலமாக வலது கால் ஊன்றி, இடது கால் தூக்கி ஆடுகின்றாயே, எனக்காக இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி கால் மாறி ஆடக்கூடாதா? அப்படி நீ இதை செய்யாவிடில் எனது உயிரை இங்கேயே துறப்பேன்”என்றார்.
மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் தனது இடதுகாலை ஊன்றி, வலது கால் தூக்கி நடனமாடி அருளினார் என்பது வரலாறு ஆகும். பொற்றாமரைக் குளம்:
இக்கோயில் மற்றுமொரு சிறப்பு பொற்றாமரை குளம் இக்குளத்தை சுற்றி நாலாபுறமும் தூண்களுடன் கூடிய பிரகாரங்கள் அமைந்திருக்கின்றன. இதன் தென்புறத்தில் திருக்குறள் அரங்கேற்றம் கண்டிருக்கிறது என்கிறார்கள்.இந்த மேன்மையை போற்றும் வகையில் பிரகார சுவரில் 1330 குரள்களையும் எழுதி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். விருத்திராசுரனைக் கொன்ற தேவர் குல தலைவன் இந்திரனின் பாவம் கடம்பவன காட்டுப் பகுதியில் இருந்த லிங்கத்தால் தீர்ந்ததாம். மலர்களால் இந்த லிங்கத்தை இந்திரன் பூஜிக்க விரும்பிய உடன் இந்த குளத்தில் பொன் தாமரைகள் தோன்றியதாக வரலாற்றில் கூறப்படுகிறது. இன்றைக்கும் கூட பொன் முலாம் பூசிய ஒரு தாமரையை குளத்திற்குள் மிதக்க விட்டுள்ளனர்.
கோயிலுக்குள் ஓவியங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருவிளையாடல் காட்சிகளை விவரிக்கும் ஓவியங்கள் நிறைந்துள்ளது. செட்டிநாடு கலை பாணியிலான 97 அடி நீளம், 47 அடி அகலத்தில் பெரியதொரு கூடத்தில், இந்த ஓவியங்களை பார்வையிடும் வகையில் வடிவமைத்துள்ளனர். அற்புத கலைப் பொக்கிஷமாக விளங்கும், இக்கூட்டத்தின் விதானம் காண்போரின் மனதை கொள்ளையடிக்க செய்கிறது.
சிவபெருமானின் வடிவங்களும் கொண்ட இந்த 122 தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் காண்போரை கவருகின்றன.
ஆயிரங்கால் மண்டபம்
நம்முடைய ஆலயங்களில் நமது முன்னோர்கள் பல அதிசய தொழில்நுட்ப அதிசயங்களை செய்துள்ளனர். என்பதை நவீன அறிவியல் கருவிகளின் மூலம் ஆராயும்போது தெரியவருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தன்னுள் பலவித அதிசயங்களை புதைத்து வைத்துள்ளது. அவற்றில் ஒரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயருடன் இருந்தாலும்கூட இதில் இருப்பது 985 தூண்கள் மட்டுமே உள்ளது. இந்த மண்டபத்தின் தூண்கள் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பது. ஒரு பெரும் அதிசயம் இந்த மண்டபத்தில் ஒலியை கட்டுப்படுத்தும் அற்புத கட்டிட உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை, 1983 ஆம் ஆண்டு மதுரையின் பிரபல இ .என்.டி மருத்துவ நிபுணரான காமேஸ்வரன் என்பவர் தன் ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.
முழு கோவிலுமே மிகுந்த மக்கள் கூட்டத்துடன் இருந்தாலும்கூட எப்போதாவது ஒருமுறைதான் 80 டெசிபல் அளவை எட்டுகிறது என்பது அவரது ஆய்வின் முடிவு.
திருவிழாக்கள்: தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் மதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண பட்டாபிஷேகம்,திரு தேவர் பவானி புகழ் பெற்றவை. நவராத்திரி, ஆவணி மூலத்திருவிழா, தை தெப்ப திருவிழா, ஆடிப்பூரம் என பல்வேறு விசேஷ நாட்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இப்படிப்பட்ட அதிசயம் நிறைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வரலாறு சிறப்பினை இவற்றில் கண்டுள்ளோம்.வாய்ப்பு கிடைக்கும் பொழுது நாமும் நேரில் சென்று அம்மனை தரிசித்து கோயிலின் அழகையும் அதிசயத்தையும் கண்டு ரசிப்போம்.