குப்பைமேனி
இதற்கு “பூனை வணங்கி” என்ற பெயரும் உண்டு. பெரிய பெரிய மரங்களின் நிழலில் வளரும் பல வகையான செடிகளின் இடை இடையே குப்பை மேனிச் செடியும் வளர்ந்திருக்கும்.
நன்றாகச் செழித்து வளர்ந்த ஒரு குப்பைமேனிச் செடியின் உயரம் 30 முதல் 32 செ.மீ. உயரமிருக்கும். செழிப்பில்லாமல் வளரும் செடியின் உயரம் 10. செ.மீ. முதல் 12 செ.மீ. உயரம் தானிருக்கும். அதற்கேற்றபடி இலைகளும், சிறியதாகவேயிருக்கும். குப்பைமேனிச் செடி அதிக கிளைகள் விடுவதில்லை. ஒரு சில கிளைகளுடன் வளரும்.
இதன் இலைகள் வட்டமாக இருக்கும். ஆனால் ஓரத்தில் பல் போல இருக்கும். நன்றாகச் செழித்து வளர்ந்த குப்பை மேனிச் செடியின் இலை,சுமார் 5 முதல் 2% செ.மீ. அகலமுள்ளதாக இருக்கும். இலைகள் சில இடங்களில் பச்சை நிறமாகவுமிருக் கும். சில இடங்களில் மஞ்சள் கலந்த பச்சை நிறமாகவுமிருக்கும். இலை கனமின்றி மெல்லியதாகவே இருக்கும்.
1. பூரான் விஷம் நீங்க
இரவு வேளையில் பூரான் கடித்துவிடுவதுண்டு. இதன் காரணமாக உடலில், பல வடிவத்தில் தடிப்புகள் ஏற்பட்டு, அரிப்பு உண்டாகும். சொறிந்து விட்டால் எரியும். இந்த விஷத்தை முறிக்கத் தேவையான அளவு குப்பைமேனி இலையைக் கொண்டுவந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்து மை போல் அரைத்து, 9 வயதிற்குக் கீழ்பட்ட ஆண் அல்லது பெண்ணின் சிறு நீரை விட்டுச் சந்தனம் போலக் குழப்பி உடல் முழுவதும் பூசிவிட வேண்டும். சுமார் அரைமணி நேரம்ஆனபின் தண்ணீரில் குளித்து விடவேண்டும். இது போலத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் பூரான் விஷம் முறிந்து தடிப்புகள் மறையும்.
2. பவுத்திரம் குணமாக
தேவையான அளவு குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் வைத்துக் காய்ந்து சருகுபோல வந்தவுடன், அதை உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசித் திப்பிலியில் 40 கிராம் எடுத்து, ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து. சிவக்க வறுத்து எடுத்து அதை உரலில்போட்டு இடித்து, மாச்சல்லடையில் போட்டுச் சலித்துத் தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, இந்த இரண்டு தூளிலும் வகைக்கு 30 கிராம் எடுத்து, ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு வாயகன்ற கண்ணாடி குடுவையில் போட்டு வைத்துக் கொண்டு. ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளையும் வேளைக்கு 5 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால், பவுத்திரம் என்ற குணமாகும்.
3. குன்ம வயிற்றுவலி நீங்க
தேவையான அளவு குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து, வடிகட்டி, ஒரு டம்ளர் அளவு ஒரு சட்டியில் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். இந்தச் சமயம் இரண்டு தேக்கரண்டியளவு உப்பையும் இத்துடன் சேர்த்து விட வேண்டும். நன்றாகக் கொதித்து நீர் சுண்டி கடைசியாக கட்டி, முட்டியாக உப்பு விளையும். இந்தச் சமயம் சட்டியை இறக்கி வைத்து ஆறிய பின், அதிலுள்ள உப்பை எடுத்து அம்மியில் வைத்துத் தூள்பண்ணி ஒரு வாயகன்ற கண்ணாடி குடுவையில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
அரை டம்ளர் மோரை எடுத்து, அதில் சிறிய தேக் கரண்டியளவு தூளைப் போட்டுக் கலக்கிக் குடித்து விட வேண்டும். காலை, மாலையாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் குன்ம வயிற்றுவலி குணமாகும். அஜீரணம், வாய்வுக் கோளாறுகள் நீங்கும்.
4. சொறி, சிரங்கு குணமாக
தேவையான அளவு குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து, அத்துடன் சிறிதளவு மஞ்சள் துண்டையும், உப்பையும் சேர்த்து மைபோல அரைத்து, சிரங்கின் மேல் கனமாகப் பூசி வைத்திருந்து அரைமணி நேரங் கழித்து சிகைக்காயை கருகச்சுட்டு அத்துடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து, சிரங்கின் மேல் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்து விட்டு, தேங்காயெண்ணெயைத் தடவி வந்தால், மூன்றே நாட்களில் சிரங்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
5.தேள் விஷம் இறங்க
குப்பைமேனி இலையுடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கசக்கிச்சாறு எடுத்து தேள் உடலின் இடது பக்கம் கொட்டியிருந்தால், வலது பக்கக் காது துவாரத்தில் இரண்டு துளியளவு சாற்றை விட வேண்டும். உடலின் வலது பக்கம் கொட்டியிருந்தால் இடது பக்கக் காது துவாரத்தில் இரண்டு துளி சாற்றை விடவேண்டும். காதில் சாற்றை விட்டபின் மிகுதியிருக்கும் சாற்றைக் கொட்டு வாயில் விட்டு பத்து நிமிடம் வரை சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். இந்த விதமாகச் செய்தால் விஷம் உடனே இறங்கி விடும். கடுப்பும் நின்றுவிடும்