கொய்யா
கொய்யா மரத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். கொய்யா மரத்தின் வேரும், இலைகளும் நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
1. சீதபேதி குணமாக
கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து இலேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் பொழுதே வடிகட்டி வைத்துக் கொண்டு, ஒரு கோழி முட்டையை உடைத்து அதன் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு நீர் போல அடித்து வைத்துக்கொண்டு, ஒருவர் கஷாயத்தை அடித்துக் கொண்டு இருக்கும் பொழுதே மற்றவர் கோழி முட்டை மஞ்சள் கரு எடுத்து அந்தக் கஷாயத்தை விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மஞ்சள் கரு எல்லாவற்றையும் விடும் வரை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு அந்தக் கசாயத்தில் பாதியளவைக் காலையிலும், பாதியளவை மாலையிலும் கொடுத்து வந்தால் நாட்பட்ட சீதபேதியானாலும் நின்றுவிடும். மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்குக் காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை சங்களவு கொடுத்து வர நாட்பட்ட சீதபேதி நின்று விடும்.
2. மூல நோய் குணமாக
இரண்டு கைப்பிடியளவு நறுக்கிய இலையை லேசாக வதக்கி இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி அந்த நீரைக் கொண்டு ஆசன வாயில் உள்ள மூலத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை கழுவி வந்தால் நாளா வட்டத்தில் மூலம் சுருங்கி கடைசியில் மூலமே இல்லாமல் போகும். ஆனால், மூலம் சுருங்கும் வரை கழுவி வர வேண்டும்.
3. வாந்தி பேதி குணமாக
நறுக்கிய கொய்யா இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டுக் கொஞ்சம் வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு, ஒரு மணிக்கு ஒரு தரம் ஒரு சங்களவு வீதம் கொடுத்துக் கொண்டே இருந்தால், காலரா என்ற வாந்தி பேதி குணமாகும்.
4. பல் நோய் குணமாக
கொய்யா இலையைக் கொண்டு வந்து அதை வாயில் போட்டு மென்று அதைக் கொண்டே பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். இதனால் ஆடும் பற்கள் கெட்டிப்படும். பற்சொத்தை நீங்கும். எகிர் வீக்கம் வாடி விடும். பற்களில் ஏற்படும் அரிப்பு அதாவது தேய்வு மாறி பல்வெண்ணிறமாகும். பல்லில் உள்ள அழுக்கு நீங்கும்.
5. வயிற்றுப் போக்கு குணமாக
கொய்யா மரத்து ஜல்லி வேர் அதாவது மெல்லிய வேர்களைக் கொண்டு வந்து அதைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் மூடிவைத்து, காலையில் ஒரு டம்ளர் அளவு கொடுத்துவந்தால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். குழந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும். இந்த நீரைக் கொண்டு மூலத்தைக் கழுவி வந்தால் மூலம் சுருங்கி விடும். ஆனால் தொடர்ந்து 21 நாட்கள் வரை கழுவி வந்தால் தான் குணம் தெரியும்.மலச்சிக்கலினால் கஷ்டப் படுகிறவர்கள் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை கொய்யாப் பழத்தைத் சாப்பிட்டு வந்தால் மலம் படிப்படியாக மணம் மாறும்.