கருவேலன்
கருவேலன் மர இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், இதன் இலை, பட்டை நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுவதால் இதையும் ஒரு மூலிகையாகவே பயன்படுத்துகின்றனர்.
கருவேலன், காடுகளில்தான் அதிக அளவில் வளர்கின்றன. இது நுனி முதல் அடிவரை கருநிறம் கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். ஆனால் பூ, காய் இவைகள் பச்சை நிறமாக இருக்கும். இதன் பூவுக்கு இதழ்கள் கிடையாது. கோலிக்குண்டலமாக நிறைய இழைகள் கொண்டதாக லேசான பச்சை நிறம் கலந்ததாக இருக்கும். இதன் விதை துவரை போன்ற வடிவமுள்ளது.
எல்லாம் பசுமை கலந்த வெண்ணிறமாக இருக்கும். இரண்டு வகையான மரத்திற்கும் ஒரே விதமான மருத்துவகுணம் தான் இருக்கும்.
1. உடல் வீக்கம் குணமாக
ஒரு சிலருக்கு துர் நீர் காரணமாக உடலில் வீக்கம் தோன்றும். இதைக் கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு மோசம் ஏற்படும். இதைக் குணப்படுத்த கருவேல மரத்துக் கொழுந்து இலை, அத்திப் பழுப்பு, கையாந்தரை, கடுக்காய், சோற்றுக்கற்றாழை வேர், களிப்பாக்கு இவைகளை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து தனித்தனியே அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு, அடுப்பில் வைத்து. நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதை இரண்டு சமபாகங்களாக்கிக் காலையும், மாலையும் வேளைக்கு ஒரு பாகம் வீதம் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம் வாடிவிடும். ஆனால், தினசரி ஆகாரத்தில் உப்புப்புளி சேர்க்கக் கூடாது. துவரம் பருப்பை மட்டும் வேகவைத்து அதைச் சாதத்தில் கலந்து சாப்பிட வேண்டும். பத்திய உணவு சாப்பிடா விட்டால் பலன் கிடைக்காது.
2. கண் நோய் குணமாக
கருவேல மரத்தின் கொழுந்து இலையை இரண்டு கைப்பிடியளவு எடுத்துக் காரமில்லாத அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதை இரண்டு அடை தட்டி நடுவில் ஒரு விரல் அளவிற்குத் துளையிட்டு இரவு படுக்குமுன் அதை பாதிக்கப்பட்ட கண்ணில் வைத்துத் துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்குச் செய்து வந்தால் ஐந்தே நாட்களில் கண்ணோய் குணமாகும். தினசரி புதிய இலை கொண்டு வந்து கட்ட வேண்டும்.
3. பெரும்பாடு குணமாக
கருவேல மரத்தின் அடிபாகத்தில், பட்டை வெடித்துத் கருநிறமாகக் கரடு முரடாக இருக்கும் பகுதியை வெட்டுக் கத்தியைக் கொண்டு வெட்டி எடுத்துவிட்டு, உள்ளேயுள்ள சுத்தமான பட்டையை மட்டும் கொண்டுவர வேண்டும். இதேபோல உதிய மரப்பட்டை, அரசம் பட்டை, நாவல்பட்டை, அத்திப் பட்டை இவைகளில் வகைக்கு 20 கிராம் எடுத்துப் பொடியாக வெட்டி சருகாகக் காய்ந்ததும், இடித்து சலித்து, ஒரு வாயகன்ற கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை இரண்டு தேக்கரண்டியளவு தூளை எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டியளவு பச்சரிசி மாவையும், அதே அளவு நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு பூரணமாகக் குணமாகும்.